மனிதன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் பொதுவான அறிவுறுத்தலாக உள்ளது. அதே வேளையில், இது தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில், ஒருநாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற பரிந்துரை அதிகப்படியானதாக இருக்கலாம் என்று ஆய்வு பரிந்துரைக்கிறது. “நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவர் வாக்கு உள்ளது.. உலகம் மட்டுமல்ல.. மனிதன் உயிர்வாழ்வதற்கும் நீர் இன்றியமையாது. மனித உடலில் 60 சதவீதம் நீரால் ஆனதுதான். சாப்பிடாமல் கூட சில நாட்கள் உயிர்வாழ்ந்து விட முடியும். ஆனால், தண்ணீர் இன்றி வாழ முடியது.
தண்ணீர் அருந்துவதின் அவசியம்:
மனித உடல் உறுப்புகள் இயங்குவதற்கு போதிய நீர்ச்சத்து அவசியம். நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு இந்த நீர்ச்சத்து மிகவும் அவசியம் ஆனது ஆகும். போதுமான அளவுக்கு நீங்கள் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடல் சூடு கட்டுப்பாடான அளவில் இருக்காது. நமது உடல் இயக்க செயல்பாடுகளுக்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம் ஆனது என்று நாம் அனைவரும் அறிந்ததே. உடலுக்கு தேவையான சத்துக்களை எடுத்து செல்வது, கழிவுகளை வெளியேற்றுவது மட்டும் இன்றி உணவு செரிமானத்திற்கும் தண்ணீர் இன்றியமையாதது.
2 லிட்டர் தண்னீர் குடிப்பது:
மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதில் பல்வேறு மாறுபட்ட தகவல்கள் உலா வருகின்றன. ஒருநாளைக்கு சராசரியாக 8 (2 லிட்டர்) கிளாஸ் தண்ணீர் அருந்துவது உடலுக்கு போதுமானதாக இருக்கும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் புது தகவல் ஒரு நாளைக்கு சராசரியாக 2 லிட்டர் தண்னீர் குடிப்பது அதிகமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுக்கு ஏற்றார்போல்:
20-35 வயதில் உள்ள இளைஞர்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 4.2 லிட்டர் குடி நீரும், 20-40 வயது வரம்பில் உள்ள பெண்கள் நாள் ஒன்றுக்கு 3.3 லிட்டர் தண்ணீரும் அருந்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஆய்வு முடிவுகள் குறித்து இங்கிலாந்தை சேர்ந்த ஆய்வாளரும் பேராசியருமான ஜான் ஸ்பீக்மேன் கூறியதாவது: நாம் குடிக்க வேண்டிய நீரின் அளவு என்பது நாம் குடிநீராக அருந்துவதும் உணவு மூலமாக கிடைக்கும் தண்ணீரின் அளவுக்கும் இடையே உள்ள வேறுபாடாகும்.
தேவைக்கு ஏற்ப வேறுபடுகிறது:
இதில், மக்கள் தாங்கள் அருந்திய உணவு குறித்த சரியான தரவுகளை அளிப்பதில்லை என்பதால் இந்த கணக்கீடு சிறிய அளவில் தவறாக உள்ளது. எனவே தேவைப்படும் நீரின் அளவை நீங்கள் அதிகப்படியாக மதிப்பிடும் நிலையும் ஏற்படுகிறது” என்றார். தண்ணீர் குடிப்பது என்பது ஒவ்வொரு நபரின் தேவைக்கு ஏற்ப வேறுபடுகிறது என்றும் ஆய்வில் தெரியவது இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.