சென்னை: எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிப்பது தொடர்பாக, நீதிமன்றம் சட்டத்திருத்தம் கொண்டு வர முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
மனுதாரர் முன்வைத்த கோரிக்கை என்ன?
தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே, மக்களின் தீர்ப்பைப் புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏ.,க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து, பின்னர் இடைத்தேர்தலில் வேறு கட்சி சார்பில் போட்டியிடுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுக்க, பதவியை ராஜினாமா செய்து மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்கான தொகையைச் செலுத்தும் வகையில் விதிமுறைகளை உருவாக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
மேலும், வழக்கு முடியும் வரை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தில் இருதரப்பு வாதம்
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலன், மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இரண்டு வாரங்களிலேயே எந்தக் காரணமும் இல்லாமல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வேறு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுவதாக வாதிட்டார்.
இதனால், முந்தைய தேர்தலுக்கான செலவுகளுக்கு அவர்களைப் பொறுப்பாக்கும் வகையில் தொகையை வசூலிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாகச் சட்டம் இல்லாத நிலையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு நேரடிப் பங்கு இல்லை என்றும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் வாதிட்டார்.
சட்டத்திருத்தம் கொண்டு வர நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா?
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், முக்கியமான கேள்விகளை எழுப்பினர்.
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்களிடம் தேர்தல் செலவை வசூலிப்பது அல்லது அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடத் தடை விதிப்பது தொடர்பாகச் சட்டம் எதுவும் இல்லாத நிலையில், நீதிமன்றம் எவ்வாறு சட்டத்திருத்தம் கொண்டு வர முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.
சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் உரியது என்றும், இயற்றப்பட்ட சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பதை மட்டுமே நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், சட்டம் இயற்றுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் குறிப்பிட்டனர்.
தேர்தல் செலவு விவரங்களை வெளியிட முடியுமா?
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடும்போது, முந்தைய தேர்தலுக்காகச் செலவிடப்பட்ட தொகை தொடர்பான விவரங்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆனால், அந்தத் தேர்தல் செலவை மீண்டும் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து வசூலிக்குமாறு உத்தரவிட முடியாது என்றும், குறிப்பிட்ட காலத்திற்கு அவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கவும் முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து, இந்த வழக்கின் மீதான உத்தரவைப் பிறப்பிப்பதை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
