மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் – கோவை சாலையில் உள்ள சிவன்புரம் அற்புத கேபி வேளாங்கண்ணி அன்னை தேவாலயத்தில், ஆண்டு தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மேட்டுப்பாளையம் சிவன்புரத்தில் அமைந்துள்ள அற்புத கேபி வேளாங்கண்ணி அன்னை தேவாலயத்தின் தேர் திருவிழா வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியாக நேற்று கொடியேற்ற விழா நடைபெற்றது.
அன்னையின் உருவம் பொறிக்கப்பட்ட திருவிழாக் கொடிக்கு புனித நீர் தெளித்து சிறப்பு மந்திரங்கள் ஓதப்பட்டன. தொடர்ந்து, கிறிஸ்தவர்கள் கொடியை ஆலய வளாகத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
இதையடுத்து, கோவை மறைமாவட்ட முதன்மைக் குரு மெல்கியோர் கொடியேற்றி வைத்து சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றினார். இதில் ஆலயப் பங்குத்தந்தை பிரான்சிஸ் ஜெரால்டு, மேட்டுப்பாளையம் அற்புத அந்தோணியார் தேவாலயப் பாதிரியார் பிலிப் உள்ளிட்ட அருட்தந்தையர்கள் கலந்துகொண்டனர்.
தினசரி சிறப்பு ஜெபமாலை மற்றும் திருப்பலி
திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் வரும் 11-ம் தேதி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு சிறப்பு ஜெபமாலை மற்றும் திருப்பலி நடைபெற உள்ளது.
வரும் 12-ம் தேதி முதியோர் மற்றும் வயதானவர்களுக்கான சிறப்புத் திருவிழா திருப்பலி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
13-ம் தேதி அன்னையின் ஆடம்பர தேர்ப்பவனி
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வரும் 13-ம் தேதி மாலை 5.30 மணிக்குத் தொடங்குகிறது.
வட்டார முதன்மைக் குரு பாதிரியார் விக்டர் பால்ராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணி அன்னையின் ஆடம்பர தேர்ப்பவனி நடைபெறும்.
விழாவின் நிறைவாக நற்கருணை ஆசீர் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேவாலய நிர்வாகத்தினர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
